
SREE SARASWATHI VIDHYALAYA HIGHER SECONDARY SCHOOL
Learn Well & Live Well
குறள் கதை -1:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

விளக்கம்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் பயனற்றுப் போய்விடும்.”
ரவீந்திரன் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் போயிற்று. அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை நாவடக்கத்தைப் பற்றி அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து விடுவான்.
இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது.
அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?”
“இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”
“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?”
“தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!”
“சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச் சம்பளம் கொடுக்க வேண்டுமா?”
"முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்.”
ரவீந்திரனின் அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார்.
அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.
ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து அவன் பேசிய பேச்சு, நல்ல வேலை கிடைக்காமல் செய்து விட்டது.